Monday, December 16, 2013

ஒரே பிரசவத்தில் 10 உயிரற்ற சிசுக்களைப் பிரசவித்த பெண்



இந்திய மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள கோடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு குஷ்வாஹா(28) ஆவார். குழந்தை இல்லாத காரணத்தினால் செயற்கை முறையில் கருவுறுவதற்கான சிகிச்சைகளை அவர் மேற்கொண்டுள்ளார். ஆனால், முறையான கண்காணிப்பு இல்லாததால் அவருக்கு பல கருக்கள் உருவாகியுள்ளன. கர்ப்பமாயிருந்த அவருக்கு நேற்றைக்கு முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கிராமத்திலிருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள ரேவா மாவட்டத்தின் சஞ்சய் காந்தி மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அழைத்துவரப்பட்டார்.
அங்கு வருவதற்குள்ளாக வழியிலேயே அவர் ஒன்பது குழந்தைகளைப் பிரசவித்திருந்தார். மருத்துவமனைக்கு வந்தவுடன் மருத்துவர்களின் உதவியுடன் மற்றொரு சிசுவையும் அவர் பெற்றார். ஆனால் அவற்றில் ஒன்று கூட உயிருடன் இல்லை. 12 வார வளர்ச்சியுடன் காணப்பட்ட அந்த சிசுக்கள் அனைத்தும் இறந்திருந்தன. செயற்கை முறையில் கருவுறச் செய்யும்போது அதனைத் தொடர்ந்து கண்காணிக்கத் தவறியதால் ஏற்பட்ட விளைவுதான் இது என்று அந்த மருத்துவமனையின் உதவி மேலாளரான டாக்டர் எஸ்.கே பதக் தெரிவித்தார். ஆரம்பத்திலேயே கரு உருவானதைக் கவனித்திருந்தால் மூன்று குழந்தைகள் வரை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்திய மருத்துவ வரலாற்றிலேயே அதிகபட்ச சிசுக்கள் ஒரே பிரசவத்தில் பிறந்தது இதுவே முதன்முறை என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 1971 ஆம் ஆண்டு ரோமில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 15 சிசுக்கள் அகற்றப்பட்டுள்ளதே உலக சாதனையாகக் கருதப்படுகின்றது.

No comments:

Post a Comment