Thursday, December 19, 2013

திருமண வயது 18: சவூதி உலமாக்கள் அவை ஒப்புதல்!

சவூதி அரேபியாவில் திருமண வயதை 18 ஆக நிர்ணயிப்பதற்கும், கணவர் மீண்டும் திருமணம் முடித்தால் முதல் மனைவிக்கு விவாகரத்து வழங்கவும் சவூதி அரேபியாவின் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) அவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்தகவலை அல் ஹயாத் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இஸ்லாம் கூறும் பெண்ணுரிமைகளை உறுதி செய்யும் சிபாரிசுகள் அடங்கிய தனிநபர் சட்ட திருத்தத்தின் வரைவு விரைவில் ஷூரா (ஆலோசனை) கவுன்சிலின் பரிசீலனைக்கு வரும். ஷூரா கவுன்சில் பரிசீலித்த வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய பின்னர் சவூதி ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ் அதில் கையெழுத்திட்டால் இச்சட்டம் அமலுக்கு வரும்.
வளைகுடா நாடுகளில் ஏகமனதான தனி நபர் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியே இச்சட்டமாகும். சட்டச் சீர்திருத்தம் தொடர்பாக சவூதி அரேபியாவின் முஸ்லிம் உலமாக்களின் அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்ட சிறப்புக் குழு தனது அறிக்கையில் இளைஞர்-யுவதிகளின் திருமண வயதை 18 ஆக நிர்ணயித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால், அத்தியாவசிய சூழலில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தால் தனக்கு விவகாரத்து செய்ய உரிமை உண்டு என்று திருமணம் செய்யும் வேளையிலேயே நிபந்தனையை விதிக்க பெண்ணுக்கு உரிமை உண்டு என்பது மற்றொரு சட்டப் பிரிவாகும்.
இல்லற வாழ்க்கை என்பது ஆண் ஆதிக்கத்திற்கு பதிலாக சம பங்களிப்புடன் கூடியது என்பதை உறுதி செய்யும் வகையிலேயே இச்சீர்திருத்தம் அமைந்துள்ளது. குடும்ப வாழ்க்கையில் ஆண்களுக்கு நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கியிருப்பது ஆதிக்கத்திற்கான உரிமை அல்ல. இல்லற வாழ்க்கையை சுமூகமாகக் கொண்டு செல்வதற்கான நிபந்தனையாகும் என்று சட்ட வரைவு கூறுகிறது.
பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க தந்தை, அவர் இல்லாவிட்டால் சகோதரன் உள்பட மிகவும் நெருங்கிய உறவினர் கட்டாயம் என்பதைத் தவிர ஆண், பெண் இடையே உரிமைகளில் வித்தியாசம் ஏதுமில்லை.
விவாகரத்து பெறுவதற்கான குறிப்பிட்ட இடைவேளைகளில் மனைவி, கணவர் வீட்டில் தங்குவதற்கு உரிமை உண்டு. மூன்றாவது கட்டத்தை அடையாத தலாக்கிற்கு மட்டுமே இது பொருந்தும் என்று சட்ட வரைவு கூறுகிறது.
திருமணம், விவாகரத்து, குடும்ப வாழ்க்கை, உயில், பாகப் பிரிவினை உள்ளிட்ட விவகாரங்களில் இஸ்லாமிய நிபந்தனைகளின் அடிப்படையில் ஏகமனதான தனியார் சட்டம் கொண்டு வர 1996-ஆம் ஆண்டு ஒமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் நடந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜி.சி.சி.) உச்சி மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
ஒவ்வொரு நாடுகளின் சூழலுக்கு தக்கவாறு சட்டதிருத்தம் கொண்டு வரவும் கருத்தொற்றுமை ஏற்பட்டது.

No comments:

Post a Comment