கல்முனை நகரில் இரண்டு கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள ஐக்கிய சதுக்கத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், பெஸ்டர் றியாஸ், உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, இசட்.ஏ.எச்.ரஹ்மான், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீட உறுப்பினர் எம்.எஸ்.எம்.சத்தார், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாறுக் உட்பட வர்த்தகப் பிரமுகர்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஐக்கிய சதுக்க நிர்மாணப் பணிகளுக்காக கல்முனை தனியார் பஸ் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் தற்காலிகமாக செயற்பட்டு வந்த 17 தற்காலிக கடைகள் அவற்றின் உரிமையாளர்களின் இணக்கத்துடன் நேற்று உடைத்து அகற்றப்பட்டன.
ஐக்கிய சதுக்கம் திட்டத்தின் கீழ் கல்முனை நகரில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற தனியார் பஸ் நிலையம் சகல வசதிகளும் கொண்டதாக தவீனமயப்படுத்தப்பட விருப்பதுடன் அதனை இரவு நேரத்திலும் இயங்கச் செய்யும் வகையில் வர்த்தகத் தொகுதி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளடக்கப்படவுள்ளன.
அத்துடன் சந்தாங்கேணி விளையாட்டு மைதானமும் பார்வையாளர் அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதற்காக கொய்கா திட்டத்தின் கீழ் இரண்டு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு கொரிய நாட்டு கொய்கா நிறுவனம் முன்வந்துள்ளது.
ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் சகிதம் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கொய்காவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியை கடந்த மாதம் கொழும்பிலுள்ள கொரிய நாட்டு தூதரகத்தில் அமைந்துள்ள கொய்கா தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இதன்போதே முதல்வரின் இத்திட்டத்திற்காக இரண்டு கோடி
ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு கொய்காவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி இணக்கம் தெரிவித்திருந்தார்.
ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு கொய்காவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி இணக்கம் தெரிவித்திருந்தார்.
அதன் பிரகாரம் முதற்கட்ட நிதியாக இருபது லட்சம் ரூபாவுக்கான காசோலை அண்மையில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீதினால் முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிதியின் மூலமே ஐக்கிய சதுக்கத்திற்கான முதற்கட்டப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment